இந்த கட்டுரையின் முடிவில் நீங்கள்,
- இயலாமையைப் பற்றி புரிந்து கொள்ளுதல்
- இயலாமையின் பண்புகள் பற்றி விளக்குதல்.
- இயலாமையின் பல்வேறு வகைகள் பற்றி வகைப்படுத்துதல்.
என்பவற்றை அறிந்து கொள்ள முடியும்
முன்னுரை
கல்வி பெறுவது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமையாகும். மேலும் ஒவ்வொரு குழந்தையும் போதுமான அளவு கல்வி பெற அவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகள் போதுமான அளவில் கொடுக்கப்பட வேண்டும் என்று தொன்றுதொட்டு வலியுறுத்தப்படுகிறது. இக்கருத்தை சுவாமி விவேகானந்தர் “சிறப்பியல்புக் குழந்தைகள் கல்வியை நோக்கி வர இயலவில்லை எனில் கல்வி தான் அவர்களை நோக்கிச் செல்ல வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இயலாமை (Disability)
ஒரு மனிதனுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பினால் அவனுக்குச் சராசரி மனிதனைப் போல் செயல்படுவதில் ஏற்படும் சிரமம் அல்லது பாதிப்பு.
ஊறுபாடு (Impairment)
ஒருவரது உளவியல் மற்றும் உடலியல் சார்ந்த உறுப்புகளின் இழப்பு அல்லது அதன் அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் ஏற்படும் மாறுபட்ட தன்மை. இப்பாதிப்பு என்பது நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இருக்கலாம்.
இயலாமையின் பொதுப் பண்புகள் (General Characteristics of Disabilities)
- உடல் உறுப்புகள் இயல்பு நிலையிலிருந்து பிறழ்ந்து காணப்படுவதாகும். உதாரணம் பிளவுபட்ட மேல் அன்னம், கை கால்கள் இல்லாமலிருத்தல்.
- உடல் உறுப்பு ஊறுபாடுகளின் பாதிப்பை அதாவது ஊனத்தின் அளவை தகுந்த சாதனங்கள், கருவிகள் மற்றும் பயிற்சிகள் கொண்டு குறைத்திடலாம்.
- ஊனத்தின் காரணமாக ஏற்படும் இடர்பாடுகளை சமூகத்தின் வசதி வாய்ப்புகள் கொண்டு வெகுவாக குறைத்திடலாம்.
- மரபு ரீதியாகவும், வளரும் நிலைகளிலும் ஏற்படலாம்.
- உடலுறுப்பு ஊறுபாடுகளின் விளைவாய் தோன்றுவதாகும்.
- பயிற்சி மற்றும் முனைப்பு இல்லையெனில் ஊனத்தின் அளவு படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புண்டு.
- தகுந்த பயிற்சி மற்றும் கல்விச்சூழல் மூலம் ஊனமுற்றவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடலாம்.
இயலாமையின் காரணங்கள் (Causes of disability)
- உடலினை நன்கு பயனுள்ள முறையில் இயக்குதலில் குறைபாடுகள்.
- குழந்தை போல் பேசுதல்.
- மேலும் சூழ்நிலைக் காரணிகளாலும் ஊனம் தோற்றுவிக்கப்படுகின்றன. முக்கியமாக அவற்றுள் மனவெழுச்சி சார்ந்த காரணிகள் பெரும் பங்குவகிக்கின்றன.
- நோய்கள் அதாவது போலியோ, பக்கவதாம் மற்றும் மூளைக்காயச் போன்றவைகளாலும் தோன்றலாம்.
- தாய் கருவுற்று இருக்கும் போது எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் தாக்கம்.
- செயற்கை முறை கருவுறுதலினாலும் ஏற்பட வாய்ப்புண்டு.
செவித்திறன் குறைபாடு (Hearing Impairment)
நம் ஐம்புலன்களில் செவி, உணர்தல் அறிவை அடைவதற்கான வழி மட்டுமல்லாமல், நம்மைச் சுற்றி நடப்பவைகளைக் கேட்டு விழிப்புணர்வு அடையவும் வைக்கின்றது. மேலும் மொழியைக் கற்றுக் கொள்வதற்கும், பேச்சாற்றலைப் பெறுவதற்கும் ஒரு சிறந்த கருவியாகச் செயல்படுகின்றது. ஒருவர் தன் செவி உணர் தன்மையை இழக்கும் பொழுது, அவரால் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நமது சமூகத்துடன் ஒத்துப்போக முடியாமல் பல சிரமங்களைச் சந்திக்க நேரிடுகிறது.
செவித்திறன் என்பது, ஒருவரின் சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் ஏற்படும் ஒலியை உள்வாங்குவதும், அவ்வொலியின் தன்மைகளைப் புரிந்து கொண்டு அவ்ஒலிக்குரியவர் மற்றும் அவ்வொலிக்குரியது எது என்று தெரிந்து கொள்வதும் ஆகும். செவித்திறன் பாதிக்கபட்ட குழந்தைகளுக்குக் கேட்பதில், பேசுவதில், தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதில் அதிகச் சிரமம் இருக்கும். இக்குறைபாடுடைய குழந்தைகளிடம் அதிகம் பேசும் திறன் காணமுடியாது.
செவித்திறன் குறைபாட்டின் வகைகள்
செவித்திறன் குறைபாட்டில் முக்கியமான மூன்று வகைகள் உள்ளன. அவை:
- ஒலியைக் கடத்தா நிலை செவித்திறன் குறைபாடு (Conductive loss) – வெளிக்காதில் ஏற்படும் பாதிப்பு.
- புலன் உணர்வு, நரம்பு சார்ந்த செவித்திறன் குறைபாடு (Sensory neural hearing loss) – உட்செவியில் உள்ள நரம்புகள், செவிப்பறை மற்றும் எலும்பு சிதைவுகளினால் ஏற்படும் பாதிப்புகள்.
- ஒலியைக் கடத்தா நிலை, புலன் உணர்வு, நரம்பு ஆகியவை இணைந்த குறைபாடு (Mixed hearing loss) – வெளிச்செவி மற்றும் உட்செவியில் ஏற்படும் பாதிப்பு.
இவ்வகையான பாதிப்புகளைக் கண்டறிய ஆடியோ மீட்டர் (Audio Meter) என்ற கருவி பயன்படுகிறது. இந்த அளவீட்டு முறையை ஆடியோ கிராம் (Audiogram) என்று அழைக்கிறோம்.
குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டின் அறிகுறிகள்
- மூன்றடி தூரத்திற்குள் சத்தமாகக் கைகளைத் தட்டும்பொழுது குழந்தை திடுக்கிடாதிருத்தல்.
- சத்தம் வரும் திசையை நோக்கிப் பார்க்காதிருத்தல்.
- புரிந்து கொள்வதில் அதிக தாமதம் ஏற்படுதல்.
- ஆசிரியரை மீண்டும் பாடப்பகுதியைக் கூறச்சொல்லி வற்புறுத்துதல்.
- ஆசிரியர் பேசும்போது முகபாவனைகளை உற்று நோக்குதல்.
- பிறர் கூறுவதைக் கவனித்தல், கேட்டவற்றைப் புரிந்து கொள்ளும் தன்மை போன்ற திறன்கள் மிகக் குறைவாகக் காணப்படுதல்.
- பேசும் பொழுது அதிகத் தடுமாற்றம் ஏற்படுதல், வாசிப்புத் திறனில் மிக மோசமான நிலை உருவாதல்.
- பேசுபவர் பக்கம் தலையைச் சாய்த்துக் கேட்டல்.
- குரல் ஒலியில் வித்தியாசம், உச்சரிப்பில் வித்தியாசம்.
- பெயரைச் சொல்லி அழைக்கும் போது திரும்பாமல் இருத்தல், கதைகள் கேட்பதில் அதிக விருப்பமின்மை.
- காதில் அடிக்கடி சீழ் வடிதல்.
- ஆசிரியர் சொல்வதை எழுதும்போது சகமாணவர்களின் உதவியை நாடுதல்.
செவித்த்திறன் குறைபாடு ஏற்படக் காரணங்கள்
1) பரம்பரைக் காரணிகள் (மரபணு சார்ந்த காரணிகள்)
2) பரம்பரை அல்லாத காரணிகள் (மரபணு சாராக் காரணிகள்)
- பரம்பரைக் காரணிகள்
- நெருங்கிய உறவுமுறைத் திருமணம்
- மரபணுக்களில் ஏற்படும் குறைகள்
- மரபணுக்களில் ஏற்படும் சிதைவுகள் போன்ற காரணங்களால் இக்குறைபாடு ஏற்படலாம்.
பரம்பரை அல்லாத காரணிகள்
- விபத்தின் மூலம் உட்செவியில் ஏற்படும் கட்டி, பாதிப்பு.
- மூளைக்குச் செல்லும் செவி நரம்புகளில் ஏற்படும் பிறவிக் குறைபாடுகள்.
- மூளையில் மொழி வளர்ச்சிக்கு உரிய பகுதியில் ஏற்படும் காயம்.
- அதிகமான சத்தங்களைக் கேட்டல்.
- வயது முதிர்வால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி.
- தாய் கருவுற்றிருக்கும் போது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுதல்.
- தாய் கருவுற்றிருக்கும் போது உயிர்ச்சத்துக்களின் பற்றாக்குறை.
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உதவும் துணைக் கருவிகள்
- ஒலிப்பான், அழைப்பு மணி, ஒலி எழுப்பும் இசைக்கருவி, டிரம்.
- புவி வரைபடங்கள் மற்றும் புவிக்கோளம்.
- கேளிக்கைச் சித்திரங்கள்.
- மின் அட்டைகள்.
- வண்ண வரைபடங்கள்.
- செவித் துணைக்கருவிகள்.
- கணினி மென்பொருட்கள், நிலைக்கண்ணாடி.
- ஒலி எழுப்பும் பொம்மைகள்.
- ஆடியோ மீட்டர்.
- வாசிப்புப் புத்தகங்கள்.
செவித்திறன் குறைபாடுடையோர் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள்
செவித்திறன் இழப்பை இளம் வயதிலேயே கண்டுபிடித்து, செவித்திறன் இழப்பிற்கு ஏற்ப, தகுந்த செவித்துணைக் கருவியை அவ்வயதிலேயெ அணிவித்து, ஒலிகளை உற்றுக் கேட்கப் பயிற்சியளித்தல் மற்றும் சூழ்நிலையிலுள்ள ஒலிகளை வேறுபடுத்தவும் பயிற்சியளித்தல். செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள், இயல்பாக வாழ முடியும் என்ற எண்ணத்தைப் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் வளர்த்தல்.
செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்குக் கல்வியளிப்பதில் ஆசிரியர்களின் பங்கு
- செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளை வகுப்பறையில் ஆசிரியரை நன்கு பார்க்கும் வகையில் அமரச் செய்ய வேண்டும்.
- ஆசிரியர்கள், மாணவர்களை நேரடியாகப் பார்த்துப் பாடம் நடத்துதல் வேண்டும். அப்பொழுதுதான் ஆசிரியரின் உடல், உதட்டசைவினைப் பார்த்து புரிந்து கொள்ள இயலும்.
- ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக காட்சிப்படங்களை (Visual Pictures) அதிகமாக காண்பித்தல்.
- அதிகமான பேச்சுத்திறன் பயிற்சி அளித்தல்.
- புதிய பாடங்களைக் கற்பிக்கும்போது உண்மைப் பொருள்களை வைத்துப் பாடம் கற்பித்தல்.
- அதிகமான பாடங்களைக் கற்பிக்கும் போது கரும்பலகையில் எழுதி பாடப் பொருட்களை விளக்குதல்.
- உரையாடல் முறையில் பேச்சுத்திறனை வளர்த்தல்.
- பார்வை மூலம் பெறக்கூடிய அனுபவங்களை உருவாக்குதல்.
- நிலைக்கண்ணாடியைப் பயன்படுத்திப் பேச்சுப் பயிற்சி அளித்தல்.
- எழுத்துப் பயிற்சிகளை வாசிப்புத்திறனுடன் செயல்படுத்த ஆசிரியர் முயற்சித்தல்.
- எளிமையான வாக்கியங்களைக் கொடுத்துப் படிக்கச் செய்தல்.
- நாடகம் மற்றும் உரையாடல் முறையில் பாடங்களை மாணவர்களுக்கு எளிதாகக் கற்க வழி செய்தல்.
- பாடம் கற்பிக்கும் போது செவித்துணைக் கருவிகளை மாணவர்கள் முறைப்படி பயன்படுத்துகிறார்களா என்று கவனித்தல்.
- அதிகமாக வண்ண வரைபடங்கள் மற்றும் மின்னட்டைகளைப் பயன்படுத்துதல்.
- தனித் திறன்களையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கித் தருதல்.
பேச்சுத்திறன் குறைபாடு (speaking Impairment)
மனித இனத்தை மற்ற உயிரினங்களிலிருந்து உயர்த்திக் காட்டுவது, அவ்வினத்திடம் காணப்படும் பேச்சுத்திறன் அகும். ஒரு குழந்தையின் மொழியானது, மழலை ஒலியில் தொடங்கி கூட்டொலிகளை உச்சரிப்பது, சொற்றொடர்களாக ஒலிப்பது, சிக்கலான முழு வாக்கியத்தைக் கூறுதல் ஆகியவையாகும். பேச்சுத் திறனானது ஒலி, வாக்கிய அமைப்பு ஆகியவை நன்றாக இருந்தால்தான் சிறப்புற அமையும். பேசுவதற்கு இன்றியமையாத திறன் கேட்டலாகும். செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பேச்சுத்திறன் பாதிக்கப்படுகிறது.
பேச்சுத்திறன் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்
- சரியான மூளை வளர்ச்சியின்மை.
- வாய், நாக்கு, தொண்டை இவற்றின் கூச்சம், மற்றும் அச்ச உணர்வுகள்.
- உதடுகள் பிளவுபட்டிருத்தல்.
- அசைவுகளில் கட்டுபாடின்மை.
- நாக்கு தடித்திருத்தல்.
- திக்கு வாய் ஏற்படுதல்.
- அதீத மழலைப்பேச்சு.
- மிகக் குறைவான சொற்களையே அறிந்து இருத்தல்.
- பேசும் செயல் வளர்ச்சியில் தாமதம்.
பேச்சுத்திறன் பாதிப்புகளை வெளிப்படுத்தும் அறிகுறிகள்
- தொடர்ந்து பேசுவதில் ஏற்படும் சிரமம்.
- பேசும்போது இடையே ஒரு சொல்லைச் சொல்ல நீண்ட நேரம் ஆக்குதல்.
- பேச்சுத்திறன் குறையுடையோர்களில் சிலர் சொற்களைச் சொல்லும் போது சில எழுத்துக்களை அழுத்தமாக உச்சரித்தல்.
- எப்பொழுதும் அச்சத்துடனும், பதற்றத்துடனும் காணப்படுவர்.
பேச்சுத்திறன் குறைபாட்டின் வகைகள்
- உச்சரிப்பில் உள்ள குறைபாடுகள் (Aritculation)
- சேர்த்தல்.
- சிதறுதல், திரித்துக் கூறுதல்.
- ஒன்றுக்குப் பதிலாக வேறு ஒன்றைப் பயன்படுத்துதல்.
- விட்டுவிடுதல்.
- குரலில் உள்ள குறைபாடுகள்
- குரல் தொனியில் ஏற்றம் / தாழ்வு.
- அழுத்தம்.
- பேச்சு சரளத்தில் உள்ள குறைபாடுகள்
- திக்குதல்.
- ஓசை தாறுமாறாக இருத்தல்.
- பயம்.
- உச்சரிப்பில் உள்ள குறைபாடுகள் (Aritculation)
பிளவுப்பட்ட உதடுகள் (Cleft lips) உள்ள குழந்தைகள் திருத்தமாக உச்சரிப்பதற்குச் சிரமப்படலாம். இவ்விதக் குறைகளை மருத்துவ சிகிச்சையின் மூலம் சரி செய்யலாம். பேச்சை ஒருங்கிணைக்கும் மையங்கள் மூளையில் உள்ளன. இம்மையங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும் பேச்சின் தன்மை பாதிக்கப்படும். இதற்கு டிஸ்ஆர்த்திரியா (Disarthria) என்று பெயர். - குரலில் உள்ள குறைபாடுகள்
குரல்வளை அமைப்பில் ஏதேனும் குறைபாடு இருப்பினும் அல்லது குரல்வளையைச் சரிவர பயன்படுத்தவில்லையெனினும் குரல் பாதிக்கப்படும்.
- குரல் தொனியில் ஏற்றம்/ தாழ்வு
குரல் வளமாக இருப்பதற்குத் தொனி அளவின் செறிவு, வலிமை, குரலின் இயல்பு ஆகிய மூன்றும் முக்கிய காரணிகளாகும். குரல் நாண்களின் வழியே சென்று வரும் காற்று தான், நமது குரலின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயிக்கிறது. - அழுத்தம்
இயல்பாகப் பேசும்பொழுது சில ஒலிகளுக்குத் தேவையில்லாமல் அழுத்தம் கொடுத்து உச்சரித்தல்.
- பேச்சு சரளத்தில் உள்ள குறைபாடுகள்
- திக்குதல்
பேச்சின் சரளத்தில் தடை ஏற்படும்போது ‘திக்குதல்’ ஏற்படுகிறது. சொன்னதையே திரும்பச் சொல்லுதல், சிலவற்றை நீட்டுதல் போன்றவையும் திக்கும் பொழுது காணப்படும். - ஓசை தாறுமாறாக இருத்தல்
பேசும் போது கையாள வேண்டிய கால இடைவெளி முறையைக் கையாளாமல் இருத்தல், பேச்சில் அதிவேகம் காட்டுதல், பேசும் வேகத்தில் வாய் குளறுதல் போன்றவை காரணமாகத் தாறுமாறான ஓசை எழுப்புவர். - பயம்
சில நேரங்களில் அளவுக்கதிமான பயத்தின் காரணமாகப் பேச்சுக் குறைபாடு ஏற்படுகிறது.
கற்றலில் ஏற்படும் இடர்பாடுகள்
- ஆசிரியர் கூறும் கருத்துக்களைப் புரிந்து பேசுவதில் ஏற்படும் சிரமம்.
- பாடங்களைப் படிப்பதில் சிக்கல்.
- குறிப்பிட்ட நேரத்திற்குள் படிக்க இயலாமை.
- ஆசிரியர் கற்பித்தலைப் புரிந்து கொள்ள வழிகாட்டும் செயல்களைச் செய்ய இயலாமை.
- திக்கித் திக்கிப் பேசுவதால் குரல்வளம் குன்றிக் காணப்படுகிறது.
பேச்சுத்திறன் குறைபாட்டினை நீக்கும் வழிகள்
- பெற்றோர்கள் சரியான உச்சரிப்போடு எளிய மொழியை இலக்கணப் பிழையின்றி, குழந்தைகளோடு உரையாடி அவர்களையும் பேசுவதற்கு ஊக்குவித்தல்.
- தகவல் தொடர்பு சாதனங்களை ஒரு முன்மாதிரியாகப் பேச்சுத்திறனை வளர்ப்பதற்குப் பயன்படுத்துதல்.
- மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளல்.
- பேச்சு நிபுணரின் ஆலோசனையின் அடிப்படையில் பேச்சுப் பயிற்சி (Speech Therapy) கொடுத்தல்.
குறைபாடுகளைக் களைய ஆசிரியர் கையாளும் அணுகுமுறைகள்
- சரியான உச்சரிப்புடன் நிறுத்தி, பலமுறை மீண்டும் மீண்டும் உச்சரித்தல்.
- சொற்றொடர்களைப் பொருள் விளங்கக் கூறுதல்.
- சக மாணவர்களோடு உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருதல்.
- மொழி பயன்பாட்டில் நிகழும் தவறுகளைத் திருத்துவதன் மூலமாகப் பேச்சு திறனை மேம்படுத்துதல்.
- சுருக்கமாக, தெளிவாக, துல்லியமாக குறைந்த நேரத்தில் சரியான முறையில் பேசுவதற்கு பயிற்சி அளித்தல்.
- திக்கிப் பேசும் குழந்தைகளின் பிரச்சினைகளில் தனி அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- படிப்படியாக பேசுகின்ற மன உறுதியை வளர்ப்பதற்கு உதவுதல்.
- குறைபாடு உள்ள மாணவர்களை அடிக்கடி குழுச் செயலில் ஈடுபடுத்தி அச்சம், கூச்சம் ஆகியவற்றை நீக்குதல்.
- நகைச்சுவையாகவும், தோழமை உணர்வுடனும் உரையாடும் இனிமையான வகுப்பறைச் சூழலை உருவாக்கிச் சரளமாகப் பேசச் செய்தல்.
பார்வைத்திறன் குறைபாடு (Visual Impairment)
நம் ஐம்புலன்களில் (பார்க்கும்) கண்டுணரும் திறன் மட்டுமே மிகச் சிறப்பைப் பெற்றிருக்கின்றது. ஏனெனில் பார்வையினால் தான் நம்மைச் சுற்றி நடப்பவைகளை நாம் சிறப்பாகக் காண முடிகிறது. அதனால்தான் “ஒரு பொருளையோ, நபரையோ அல்லது ஒரு நிகழ்வையோ (வெறும் வார்த்தைகளால்) விளக்குவதைவிட அவற்றைக் கண்களால் காண்பது நூறு முறை நாம் பெற்ற அறிவிற்குச் சமம்” என்று கூறப்படுகிறது. இந்த அனுபவங்களை பெறுவதற்கு, நமக்குப் பார்க்கும் திறன் வேண்டும்.
ஆனால், பார்வையிழந்த குழந்தைகள் தங்களுடைய வாழ்வில், தங்களைச் சுற்றி நடப்பவைகளை நேரடியாகக் காண முடியவில்லை. இதனால் கண்பார்வையற்ற குழந்தைகளின் நலனுக்காக, அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்களுக்குத் தகுந்த சிகிச்சையளிக்க அவர்களின் கல்வியை மேம்படுத்த, நாம் கவனத்துடன் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
பார்வைத்திறன் பாதிப்பின் வகைகள்
- குறைந்தளவு பார்வைத்திறன் (Low Vision)
- முழுமையாகப் பார்வை இழப்பு (Total Blindness)
- குறைந்தளவு பார்வைத்திறன்
குறைந்தளவு பார்வைத் திறனுடையவர்கள், கேட்டல் மற்றும் காட்சி சாதனங்கள், அச்செழுத்துக்கள் ஆகியவற்றை எஞ்சியுள்ள பார்வையைப் (Residual Vision) பயன்படுத்திப் கற்கும் நிலையில் உள்ளவர் ஆவர்.
2. முழுமையாகப் பார்வை இழப்பு
முழுமையாகப் பார்வையற்றவர்கள் (Totally Blind) செவிப்புலன் மற்றும் தொடுபுலன்களால் மட்டும் கற்றுக் கொள்பவர்கள் ஆவர்.
3. பார்வையில் பாதிப்பு (Visual Impairment)
பார்வையில் பாதிப்பு என்பது கண்நோய், விபத்து மற்றும் பிறவியிலிருந்தே இருக்கும் கண்ணின் பார்வைத் தன்மை ஆகிய காரணங்களால் ஏற்பட்ட குறைந்த பார்வையாகும். சில பார்வை பாதிப்புகளைச் சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
பார்வைத்திறன் குறைபாட்டிற்கான காரணங்கள்
- கண்ணில் புரை
- வைட்டமின் ஏ குறைவு
- அம்மை நோய்
- விபத்து
- பரம்பரை நோய்கள்
- ஊட்டச்சத்து குறைபாடு
- மூளையில் கட்டி
- குழந்தைப் பருவத்தில் ஏற்படும் சர்க்கரை நோய்
பார்வைக் குறைபாடுகளைக் களைய ஆசிரியர் கையாள வேண்டிய அணுகுமுறைகள்
- பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளை வகுப்பின் முன் வரிசையில் அமர வைக்க வேண்டும்.
- கண்களில் நேரடியாக ஒளிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- துணைக் கருவிகளில் உள்ள எழுத்துக்கள் பெரிதாகவும், எதிர்மறை வண்ணங்களைக் கொண்டதாகவும் தயாரிக்கப்பட வேண்டும்.
- கரும்பலகையில் எழுதும்போது வாய்மொழியாகச் சொல்லிக் கொண்டே எழுத வேண்டும்.
- சொற்கள், சொற்றொடர்களை ஒலிநாடாவில் பதிவு செய்து, பிறகு அதனை இயக்கித் தொடர்ந்து கேட்கச் செய்ய வேண்டும்.
- களிமண் மாதிரிகளைப் பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.
- அறிவியல் மற்றும் சமூகவியல் கற்பித்தலில் தொடு உணர்வு மூலம் உணர்ந்து கொள்ளக் கூடிய படங்களைத் தயார்செய்து பயன்படுத்த வேண்டும்.
- பார்வைவயற்ற குழந்தைகளை விளையாட்டில் கலந்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும்.
- கணினி மூலம் பெரிய அச்சுப் பிரதிகளைத் தயாரித்துக் குறைந்த அளவு பார்வைத்திறன் உள்ளோருக்கு வழங்க வேண்டும்.
- தொடுபுலன், செவிப்புலன், சுவை உணர்திறன், நுகர்தல் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்திக் கற்பிக்க வேண்டும்.
மனக்கோளாறு
அனுபவங்களிலிருந்து பெரிதும் விலகி காணப்படும் நிலையே மனக்கோளாறு ஆகும். மனமுதிர்ச்சியுடையோர், இலக்குகளை அடைவதில் உள்ள தடைகளைக் கண்டறிந்து நீக்குவதன் மூலம் மனமுறிவையும் இலக்குகளை சரியாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மனப்போரட்டங்களையும் தவிர்ப்பர்.
மனத்திறமை இல்லாதவர்கள் மனப்போரட்டங்களை தவிர்க்க தற்காப்பு நடத்தைகளை பின்பற்றுவர். சில நேரங்களில் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலால் மனநெருக்கடி தோன்றி சமாளிக்க முடியாத அளவிற்கு மனநிலை பிறழ்வு ஏற்பட்டு தீவிர மனநோய்க்கு ஆளாவர். இதுபொதுவாக தற்காலிகமானதாகவே இருக்கும். இந்நிலைக்கு ஆட்பட்டோரை தான் நாம் மனக்கோளாறு உடையவராக கருதுகிறோம்.
மனவளர்ச்சி குன்றிய நிலையை உணர்த்தும் அறிகுறிகள்
- அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் தாமதம்.
- 12 – 15 மாதத்திற்குப் பிறகும் உட்காரமல் இருத்தல்.
- இரண்டரை வயதிற்குப் பிறகும் நடக்காமல் இருத்தல்.
- இரண்டரை வயதிற்குப் பிறகும் பேசாமல் இருத்தல்.
- 6 வயதிற்குப் பிறகும். தன்னிச்சையாகச் சாப்பிடுவதில், உடை அணிவதில், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் மற்றவர்களின் உதவியை நாடுதல்.
- சக வயதுடையோரிடம் விளையாடுவதில் சிரமம். அத்துடன் விளையாடும் போது அடிக்கடி அதீத கோபம் அடைதல்.
- பேச்சுகள் மற்றும் வாய்மொழிக் கட்டளைகளைப் பின்பற்றுவதில் சிரமம்.
- வாய்மொழிக் கட்டளைகளைப் பின்பற்றுவதில் சிரமம்.
- ஒரே முறையில் இரண்டு அல்லது மூன்று கட்டளைகளைப் பின்பற்றுவதில் சிரமம்.
- தன் சூழலைப் பற்றித் தெரியாதிருத்தல் மற்றும் அறியாதிருத்தல்.
- வகுப்பறை நிகழ்ச்சிகளில் பங்கு பெறாதிருத்தல்.
- படிப்பில் முன்னேற்றமின்மை, கவனக்குறைவு, அதிக மறதி போன்றவை.
- வகுப்பில் ஒரே இடத்தில் உடகார இயலாமை.
- புதுக்கருத்துக்களை, செயல்களைக் கற்றுக்கொள்வதில் சிரமம்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கல்வியில் ஆசிரியரின் பங்கு
- அன்றாட தனிநபர் கடமைகளைச் சரிவரச் செய்வதற்குச் சிறப்பாசிரியரை அணுகி அத்திறன்களைக் கற்பிக்கச் செய்தல்.
- குழந்தைகளின் திறமைக்கு ஏற்ப்ப பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துக் கருத்துகளையும் வாய்மொழியாக மட்டும் இன்றிச் செயல் முறை மூலமாகவும் படிப்டியாக விளக்க வேண்டும்.
- குழந்தையின் மனவளர்ச்சிக்கு ஏற்றாற்போல் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே கற்பித்தல் நன்று.
- குழந்தைகளுக்கு வெற்றியைத் தரக்கூடிய வாய்ப்புகளைக் கண்டறிந்து அவற்றிலிருந்து பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.
- எண்களைக் கற்றபின் கூட்டல், கழித்தல் ஆகியவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும்.
- உடலின் பாகங்களைக் கற்றுக்கொடுக்கும் போது, முழு உடலைக் காட்டி, பிறகு உடலின் பல பாகங்களை ஒவ்வொன்றாகச் சொல்லித் தரலாம்.
- ஒன்று அல்லது இரண்டு கட்டளை வாக்கியங்களுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- நினைவாற்றலை வளர்க்கும் பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
- அன்றாட அடிப்படைக் கடமைகளை செய்யக் கற்பித்தல்.
மூளை முடக்குகுவாதம் அல்லது பெருமூளை பால்ஸ்ஸி (Cerebral Palsy)
மூளை முடக்குவாதம் என்பது நரம்பு கோளாறினால் ஏற்படும் நோயாகும். முடக்கநோய் என்பது மைய நரம்பு மண்டலக் குறைபாட்டினால் ஏற்படும் அசாதாரண நரம்பு மாற்றத்தின் அசைவாகும்.
மூளை முடக்குவாதத்தின் அறிகுறிகள் (Symptoms of Cerebral Palsy)
- முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லா உடலுறுப்புகளும் சரிவர இருந்தும், அந்த உறுப்புகளினால் பயன்பாடு அடையாமல் உடல் குறைபாட்டுடன் காணப்படுவர்.
- இது மட்டுமின்றி மேற்கூறிய குறைபாடுகளினால் சிலருக்கு கண், காது, மற்றும் பேச்சுத் திறனிலும் குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு.
- விறைப்பான தசை அமைப்பு மற்றும் இயக்க ஒருங்கிணைப்பு இன்றி காணப்படுவர்.
- உணவு மற்றும் நீரை முழுங்குவதில் சிரமப்படுதல்.
- உடலில் ஒரு பக்க உறுப்புகளை மட்டும் உபயோகித்தல்.
- முக்கியமாக கண் மற்றும் கை கால்கள் சமநிலையின்றிக் காணப்படுவர். ஆகையால் இவர்களுக்குக் கல்வி கற்பித்தில் தீவிரப் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
- இக்குறைபாடுடையவர்கள் மீது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி, முறையான தேகப்பயிற்சிகளை அளிக்க வேண்டும். கல்வி கற்பிப்பதிலும் தனிக்கவனம் செலுத்துதல் வேண்டும்.
மூளை முடக்குவாதத்திற்கான காரணங்கள் (Causes of Cerebral Palsy)
- குழந்தை பிறப்பின் போது ஏற்படும் சிக்கலால் குழந்தையின் மூளைக்கு நில நிமிடங்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகுதல்.
- பிறந்த குழந்தைக்குகு தீவிர மஞ்சள் காமாலை (Severe Jaundice) இருத்தல்.
- கர்ப்ப காலத்தில் தாய்க்கு தட்டமை (German Measles) போன்ற வைரஸ் தொற்று நோய்கள் ஏற்படுதல்.
- பிறந்த குழந்தையின் மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுதல்.
- குழந்தையின் தலைப்பகுதியில் காயம் ஏற்படுதல்.
பன்முக செயலாற்றல் குறைபாடு (Multiple Disability)
பன்முக செயலாற்றல் குறைபாடு என்பது ஒன்றிற்கு மேற்பட்ட குறைபாடுகளை கொண்டிருத்தல் ஆகும்.
பன்முக செயலாற்றல் குறைபாட்டின் இயல்புகள் (Characteristics of Multiple Disability)
- ஒதுக்கப்பட்டதாக உணர்வர்.
- சமூகத்தில் யாருடனும் சேராமல் விலகிச் செல்வர்.
- யாராவது அவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றால் தங்களது சினத்தை வெளிப்படுத்துவர்.
- தனக்குத்தானே காயம் ஏற்படுத்தி கொள்ளும் வகையில் செயல்படுவர்.
- வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி தன்மையை வெளிப்படுத்த மாட்டார்கள்.
- சரியான மனவெழுச்சியை வெளிப்படுத்த தயங்குவர்.
- சுயபராமரிப்பு திறனிலும், சமூகத்திறனிலும் குறைவுப்பட்டு காணப்படுவர்.
- வித்தியாசமான உடல் தோற்றம் கொண்டிருப்பர்.
- உடலியக்கத் திறன்கள் தேவைப்படும் விளையாட்டுகளில் பங்கேற்ற முடியாமல் தவிப்பர்.
முடிவுரை
இப்பதிவில் இயலாமையைப் பற்றியும், இயலாமையின் பல்வேறு வகைகள் பற்றியும், அவர்களுக்கு எவ்வாறு கல்வியளிப்பது பற்றியும் விரிவாக அறிந்து கொண்டோம்.
சிந்திக்கவும் கலந்துரையாடவும் சில வினாக்கள்
- இயலாமையின் பண்புகள் பற்றி விளக்குக.
- இயலாமைக்கான காரணங்கள் பற்றி ஆராய்க.
- இயலாமையின் பல்வேறு வகைகள் பற்றி விவரிக்க.
Read more:
- செயல்நிலை ஆய்வு – கல்விமாணி கற்கைநெறி (Research for B.ed & M.ed)
- எண்மான தொழினுட்ப கல்வியின் சவால்களும் அவற்றை வெற்றிகொள்ளலும் (சுற்றாடல்சார் பாடத்தினை மையமாகக் கொண்ட ஆய்வு)
- அனைவருக்கும் கல்வி : இலங்கையில் கல்வி வாய்ப்புகளை வழங்குவதில் உள்ள சவால்களை இழிவளவாக்குதல்.
- கல்வியில் சமத்துவமின்மையை பகுப்பாய்வு செய்தல்
- உள்ளடக்கல் கல்விக்கான தேசிய மற்றும் சர்வதேச அளவில் முன்வைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் கட்டளைகள்
எமது WhatsApp குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.
ஆரம்பப்பிரிவு ( தரம் 01 – 05 ) குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.
https://chat.whatsapp.com/GUJDMcOOP1REj266FNVA6X
எமது WhatsApp Channel இல் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.
இடைநிலைப்பிரிவு ( தரம் 06 – A/L) குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.
https://chat.whatsapp.com/CRxK1Zqu0XJ52hJYNGC6ab
எமது Facebook தளத்தை பார்வையிட கிழே உள்ள link இனை அழுத்தவும்.
https://www.facebook.com/profile.php?id=100090300862977&mibextid=ZbWKwL