இக்கட்டுரையின் முடிவில்,
- கற்றல் இயலாமை என்ற கருத்தினை விளக்குதல்.
- கற்றல் இயலாமையின் அறிகுறிகளைப் பட்டியலிடல்.
- பல்வேறு கற்றல் இயலாமைகளைப் விவரித்தல்.
- கற்றல் இயலாமைகளைக் கொண்ட குழந்தைகளை அடையாளம் காணல்.
- ஒருங்கிணைந்த கல்வியின் முக்கியத்துவத்தை கலந்தாலோசித்தல்.
என்பவற்றை கற்றறிய முடியும்.
அறிமுகம்
கற்றல் குறைபாடு என்பது நரம்பியல் அடிப்படையிலான செயல்முறைச் சிக்கலாகும். இச்செயல்முறை பிரச்சினையானது கற்றல் அடிப்படை திறன்களான படித்தல், எழுதுதல், கணக்கிடுதல் போன்றவற்றில் குறுக்கீடு செய்கிறது. இவை உயர்மட்ட திறன்களான ஒருங்கமைத்தல், காலத்திட்டமிடுதல், கருத்தியல் காரணமறிதல், குறுகிய கால அல்லது நீண்ட கால நினைவுத்திறன் மற்றும் கவனத்தை குறிக்கீடு செய்கிறது.
கல்விச் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, இக்குறையானது குடும்பம், நண்பர்கள் மற்றும் பணிபுரியும் இடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுருங்க கூறின் கற்றல் குறைபாடு உள்ளோர் சராசரி நுண்ணறிவுத்திறன் பெற்றவராக இருப்பர். இவை தனிநபரின் திறனிற்கும் அடைவிற்கும் இடைவெளியை ஏற்படுத்துகிறது. ஆகையால் தான் கற்றல் குறைபாடு “மறைக்கப்பட்ட திறமைகள்” என்று குறிப்பிடப்படுகிறது.
இவர்கள் பார்ப்பதற்கு முற்றிலும் இயல்புநிலையுடனும், புத்திக்கூர்மையும் படைத்தவராக காணப்படுவர் இருப்பினும், ஒத்த வயதினருக்கு நிகரான திறமைகளை வெளிப்படுத்த இயலாத நிலை காணப்படும்.
பொருள்
கற்றல் குறைபாடு என்பது ஓர் வாழ்நாள் செயலாகும். கற்றல் குறைபாடானது மரபியல் அல்லது உயிரியல் அல்லது நரம்பியல் காரணங்களாலோ அல்லது காயங்களால் ஏற்படும் மூளை செயல்பாட்டு பிரச்சினையாகும். இது கற்றலுக்கு தொடர்பான ஒன்றுக்கு மேற்பட்ட செயல்முறையை பாதிக்கும்;.
இவை கையகப்படுத்தல், ஒருங்கமைத்தல், மீட்டுணர்தல், புரிதல் போன்றவற்றை பாதிக்கும் எண்ணற்ற குறைபாடுகளை குறிக்கிறது. இக்குறைபாடானது தனிநபரின் சிந்தனைத்திறனையும் காரணகாரியம் அறிதலையும் பாதிக்கிறது.
கற்றல் குறைபாட்டின் வகைகள்
- டிஸ்லெக்சியா (Dyslexia)
- டிஸ்கிராஃபியா (Dysgraphia)
- டிஸ்கால்குலியா (Dyscalculia)
- டிஸ்பிராக்ஸியா (Dyspraxia)
டிஸ்லெக்சியா (Dyslexia)
இக்குறைபாடானது கற்பவரின் படிக்கும் திறன் மற்றும் மொழிசார்ந்த திறனை பாதிக்கிறது. இது ஒவ்வொரு தனிநபருக்கும் மாறுபட்டது. இக்குறைபாடுடையவர்கள் சரளமாக வாசித்தல், புரிந்துணர்தல், மீட்டுணர்தல், எழுதுதல், பேசுதல் போன்றவற்றில் குறைபாட்டுடன் இருப்பர். இது மொழி அடிப்படையிலான கற்றல் குறைபாடு என்றும் சில சமயங்களில் அழைக்கப்படுகிறது.
கற்றல் குறைபாடுடையோர்களிடையே டிஸ்லெக்சியா என்னும் பொதுவான கற்றல் குறைபாடு பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. அனைத்து நிலை நுண்ணறிவுத்திறன் உடையோர்க்கும் இக்குறைபாடு ஏற்படலாம். டிஸ்லெக்சியா என்னும் இக்குறைபாடு பற்றிய நேர்மறை எண்ணமாவது இக்குறைபாடுடையோர் பன்முக சிந்தனை, உயர் ஆக்கத்திறன் மற்றும் செய்து கற்றலில் சிறந்து விளங்குவதாக கருதப்படுகின்றனர்.
அறிகுறிகள்
- மெதுவாக கற்கும் திறன்.
- சில வார்த்தைகளை கவனித்தலிலும், படித்தலிலும் சிரமங்களை சந்தித்தல்.
- எழுத்து பிழைகளை இழைத்தல்.
- கையெழுத்தில் சிரமங்கள் ஏற்படலாம்.
- தெரிந்த வார்த்தைகளை மீட்டுணர்தலில் கடினமாக உணர்தல்.
- எழுத்துக்கூட்டி படிப்பதில் கடினத்தன்மை.
இக்குறைபாடுடைய மாணவர்களுக்கு பல்வேறு கற்பித்தல் துணைக்கருவிகள் மற்றும் மென்பொருட்களை பயன்படுத்தலாம். எந்த கற்பித்தல் முறையை தேர்ந்தெடுத்தாலும் அவற்றை நேர்மறையாக ஆசிரியர்கள் உணர்ந்தால் அவை மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வெற்றிக்கு வழிவகுக்கும். அளிக்கப்படும் பயிற்சியானது பார்த்தல், கவனித்தல், பேசுதல், தொடுதல் போன்ற பன்-புலணுணர்வு உள்ளடக்கியதாக இருத்தல் அவசியம்.
கற்கும் குழந்தை எவ்வகையான கற்கும் திறன் உடையவர் அதாவது குறிப்பாக கண்டுணர்ந்து கற்றல் அல்லது கவனித்து கற்றல் அல்லது செய்துக் கற்றல் மூலம் கற்கும் திறன் கொண்டவரா? என ஆராய்ந்து அவரவர்க்கு ஏற்றார் போன்று கற்பித்தல் உத்திகளை பயன்படுத்தலாம்.
காட்சி மூலம் கற்பவர்
- படங்கள் மற்றும் பல்லூடக பொருட்களை பயன்படுத்துதல்.
- பார்வையில் படும்படி வார்த்தைகளை ஒட்டி வைத்தல்.
- படிப்பதற்கு முன்பு படங்களை புத்தகத்தில் பார்க்கலாம்;.
- நினைவாற்றலை மேம்படுத்தும் விளையாட்டு மற்றும் புதிர்களை தருதல்.
- மனவரைப்படம் வரைதல்.
- பல்வேறு வண்ணங்களை பயன்படுத்துதல்.
- காட்சி மென்பொருளை பயன்படுத்துதல்.
செவிப்புலன் மூலம் கற்பவர்
- கற்க வேண்டிய புத்தகத்தை பற்றி பேசுதல் அல்லது தகவல்களை படித்தல்.
- வாய்மொழியாக அளித்த அறிவுறுத்தல்கள் தெளிவாக உள்ளனவா என்று உறுதிபடுத்துதல்.
- மாணாக்கர் தகவல்களை பதிவு செய்து கொண்டு மீண்டும் கவனிகக் வழிவகை செய்தல்.
- சிறந்த செவிபுல உள்ளீட்டு மென்பொருள் பயன்படுத்துதல்.
செய்து கற்றல் மூலம் கற்பவர்
- மணலில் எழுத்துக்களை எழுதுதல்.
- மரத்தால் ஆன எண்கள் மற்றும் எழுத்துக்களை பருப்பொருளாக கையாளுதல்.
- தகவல்களை அறியும் போதே மனனம் செய்தல்.
டிஸ்க்கிராஃபியா (Dysgraphia)
டிஸ்கிராஃபியா என்ற சொல் ‘டிஸ்’ மற்றும் ‘கிராஃபியா’ என்னும் கிரேக்க சொல்லால் உருவானது. ‘டிஸ்’ என்பது ‘கடினம்’ என்பதனையும், ‘கிராஃபியா’ என்பது ‘எழுதுதல்’ என்பதனையும் குறிக்கும். இக்குறையானது கையெழுத்து திறனை பாதிக்கும். இக்குறைபாட்டால் பாதித்த ஒருவர் தெளிவற்ற கையெழுத்து, ஒவ்வொர் வரிக்கும் போதுமான இடைவெளி, எழுத்துப் பிழை போன்றவை ஏற்படும்.
அறிகுறிகள்
- தெளிவற்ற கையெழுத்து.
- வார்த்தைகளுக்கும் எழுத்துக்களுக்குமிடையே போதுமற்ற இடைவெளி.
- விசித்தர மணிக்கட்டு, காகிதத்தை கையாளும் நிலை.
- மெதுவாக எழுதுதல்.
- காகித்தை திட்டமிட்டு பயன்படுத்துதல்.
- அசாதாரன பிடியால் கையில் வலி அல்லது புண் ஏற்படுதல்.
- ஒரே சமயத்தில் சிந்தித்தல் மற்றும் எழுதலால் பெருஞ்சிரமம் ஏற்படுதல்.
உத்த்திகள்
- டிஸ்கிராஃபியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கை தசைகளை வலுவாக்கி, அவர்களின் உடற்செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் களிமண்ணில் விளையாடச் செய்வது, புள்ளிகள் அல்லது சிறிய கோடுகளை ஒன்று சேர்த்து எழுத்துக்களை உருவாக்குதல், ஆட்காட்டி விரலை அல்லது எழுதுகோலை கொண்டு எழுத்துக்களின் தடம் அறிதல்.
- சிறிய அளவிலான எழுத்து ஒப்படைப்புகளை அளித்தல்.
- குறிப்புகள், தேர்வு மற்றும் பார்த்து எழுதுவதற்கு நேரத்தை ஒதுக்குதல்.
- ஒப்படைப்புகள் அல்லது செயல்திட்டங்கள் முன்னதாகவே ஆரம்பித்தல்.
- ஒரு சில எழுத்து பயிற்சிகளில் குறியீடுகள் பயன்படுத்த அனுமதித்தல்.
- மாணவர்களுக்கு கையெழுத்து நோட்டில் எழுத பயிற்சியளித்தல். மாணவர்கள் தங்களது கையெழுத்தினை மேம்படுத்த தொடர் பயிற்சியில் ஈடுபட வேண்டும், ஏனெனில் அது நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் முக்கிய திறனாகும்.
டிஸ்கால்குலியா (Dyscalculia)
கணித கருத்துக்களை கற்பதில், எண்களை புரிந்து கொள்வதில் மற்றும் தனிநபரின் கற்றலில் டிஸ்கால்குலியா பாதிப்பினை ஏற்படுத்துகிறது. எண்களை கூட்டுதல், நேரம் பார்த்து சொல்லுதல், எண்களை ஒருங்கமைத்தல், கணித குறியீடுகளை புரிந்துகொள்வதில் மாணவர்களிடையே இவ்வகையான கற்றல் குறைபாடு பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
அறிகுறிகள்
- கணிதத்தில் இடமதிப்பு, எண் கோடுகள், மிகை மற்றும் குறை எண் போன்ற கருத்துக்களை புரிந்துகொள்வதில் கடினம்.
- கணித பிரச்சினைகளை தீர்ப்பதில் கடினத்தன்மை உணர்தல்.
- தகவல்கள் மற்றும் சம்பவங்களை வரிசைப்படுத்துவதில் சிரமங்கள் ஏற்படுவது.
- பின்னங்களை புரிந்துகொள்வதில் கடினம்.
- பணம் மற்றும் சில்லறைகளை கையாள்வதில் சவால்களை சந்தித்தல்.
- கூட்டல், கழித்தல், பெருக்கல் அல்லது வகுத்தலில் கையாலும் வழிமுறைகளை அடையாளம் காண்பதில் சிரமம்.
- மொழிவடிவினை கணித அடிப்படையிலான செயல்பாடாக மாற்றுதல்.
- நாட்கள், வாரங்கள், மாதங்கள் போன்ற நேரத் தொடர்பான கருத்துக்களை புரிந்துகொள்வதில் சிரமம்.
- கணித பிரச்சினைகளை ஒருங்கமைத்தலிலும், நீண்ட வகுத்தலிலும் சிரமம் ஏற்படுதல்.
உத்திகள்
- அன்றாடச் செயல்பாடுகள் கொண்டு தொடங்குதல் மற்றும் பருப்பொருட்களை பயன்படுத்துதல்.
- மாணவர்களிடையே ஏற்படும் பதற்றத்தினை தவிர்த்தல்.
- மாணாக்கர் விரும்பும் கற்றல் வழிமுறையை உருவாக்குதல்.
- கணித பிரச்சினையை தீர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறைகளை கற்பித்தல்.
- பிரச்சினைகள் தீர்ப்பதில் தவறுகள் இழைத்தனர் என்பதற்கு மாறாக மாணாக்கர்கள் ஏற்படுத்தும் பிழையை புரிந்து கொள்ள முனைவது.
- ஒரு சமயத்தில் ஒரே ஒரு கருத்தில் கவனம் செலுத்துதல்.
- கணித பிரச்சினைகளை மனக்கண்ணில் காட்சிப்படுத்த மாணாக்கருக்கு ஆர்வமூட்டல்.
- அன்றாட வாழ்க்கைச் சூழலோடு கணித பிரச்சினைகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் தொடர்புபடுத்துதல்.
- தாங்கள் கொணர்ந்த பிரச்சினைக்கான தீர்வினை வார்த்தை வடிவில் கூறச்செய்தல்.
- புதிய கருத்துக்களை தகுந்த முறையில் விளக்குதல்.
- மாணவர்களின் புரிந்துணர்தலை சோதிக்க கணிதக் கருத்துக்களை பின்னிருந்து முன்னாக கற்பிக்க செய்தல்.
- மாணவர்களை தம்மைத் தாமே கணினி, கணிப்பான் போன்றவைகளை பயன்படுத்த அனுமதித்தல்.
- மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை முடிக்க கூடுதல் நேரம் அளித்தல்.
- சீரான கணித மொழியை வகுப்பறை மற்றும் பள்ளிகளில் பயன்படுத்துதல்.
- நினைவுக் குறியீடு, விதிகள், அட்டவணை மற்றும் சூத்திரங்களை மனனம் செய்ய உதவுதல்.
- மாணவர்களின் தேவை மற்றும் திறன்களுக்கேற்ப தகுந்த உத்திகளை பொருத்துதல்.
டிஸ்பிராக்ஸியா (Dyspraxia)
டிஸ்பிராக்ஸியா என்ற கற்றல் குறைபாடுடையவர்கள் தங்கள் பணியைசெய்து முடிப்பதிலும் உடல் உறுப்புக்களின் செயல்பாட்டினை ஒருங்கமைத்தலிலும் சிரமம் ஏற்படுகிறது. உடற்செயற்பாட்டு திறன்களோடு ஒப்பிடுகையில் தம்மோடு பயில்பவர்களிடையே பின்தங்கி காணப்படுவர்.
இக்குறைபாடுடையோர் தசை இயக்க கட்டுப்பாடு, மொழி, நகர்வு மற்றும் ஒருங்கிணைப்பில் கடினத்தன்மையை வெளிப்படுத்துவர். டிஸ்பிராக்ஸியா என்னும் இக்குறைபாடானது டிஸ்லெக்சியா மற்றும் டிஸ்கால்குலியாவோடு சேர்ந்து காணப்படும்.
டிஸ்பிராக்ஸியாவின் வகைகள்
- Ideomotor dyspraxia
தலைசீவுதல் மற்றும் உடை உடுத்துதல் போன்ற ஒரு படி உடற்செயற்பாடு செய்வதில் கடினத்தன்மை.
- Ideational dyspraxia
பல் தேய்த்தல் போன்ற தொடர்ச்சியான உடற் இயக்க செயல்பாடுகளை செய்வதில் கடினம்.
- Oromotor dyspraxia
இது வார்த்தை அப்ராக்ஸியா என்றும் அழைக்கப்படுகிறது. வார்த்தை உச்சரிப்புக்கேற்ப தசை அசைவுகளை ஒருங்கிணைத்தல்.
- Constructional dyspraxia
இடம்சார் தொடர்புகளை கையாள்வதில் கடினத்தன்மை.
அறிகுறிகள்
- உடற்சார்ந்த செயல்பாடுகளை திட்டமிடுதலில் கடினத்தன்மையை வெளிப்படுத்துதல்.
- உடலின் இருபக்க செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதில் திறனின்மை.
- கண் – கை ஒருங்கிணைப்பதில் சிரமம்.
- தன்னைச் சார்ந்த பணிகளை ஒருங்கமைக்கும் திறனில் பின்னடைந்த நிலை.
- கடிகாரச் சத்தம், எழுதுக்கோலை தட்டுதல் போன்ற சத்தத்தினால் உளைச்சல்.
- இறுகிய கடினமான உடைகளினால் எரிச்சல் உணர்வு.
உத்த்திகள்
டிஸ்பிராக்ஸியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் உதவக்கூடிய சில குறிப்பிட்ட உத்திகளாவன:
- காட்சி, கேள்வி போன்ற ஏதேனும் ஒன்றை கொண்டு கற்பித்தல்.
- அடுத்தவர் முன்பு தங்களது திறமையை வெளிப்படுத்த விரும்பாத நிலையில், அத்தகைய சூழலை தவிர்த்தல்.
- வகுப்பறையில் பொருட்களை ஒரே இடத்தில் வைப்பதினால் அவற்றை எளிதில் கண்டறிய உதவும்.
- எழுத்துப் பயிற்சிக்கு மாற்று வழிமுறைகளை கையாளுதல்.
- தேவையான நேரத்திற்கு தகுந்த அறிவுறைகளை வழங்குதல்.
- டிஸ்பிராக்ஸியா குறைபாடுடைய குழந்தைக்கு தகுந்த பாதுகாப்பான விளையாட்டு பகுதியை அளித்தல்.
குறைபாடுடைய குழந்தையை அடையாளம் காணும் அணுகுமுறைகள்
1.அறிவார்ந்த அணுகுமுறை:
இவ்வணுகுமுறையானது முற்றிலும் குழந்தையின் அறிவுத் திறனை அடிப்படையாக கொண்டது. மீத்திறன் மிக்க மாணவர்கள், இயல்பாக கற்கும் மாணவர்கள், மெதுவாக கற்போர், மனநிலை குன்றியர்கள் போன்றோர் அனைவரும் இவ்வணுகுமுறை மூலம் அடையாளம் காணப்படுகின்றனர்.
(எ.கா.)
- நுண்ணறிவு ஈவு 50 – 75 வரை உள்ள அனைவரும் மனநிலை குன்றியவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர்.
- நுண்ணறிவு ஈவு 25 – 50 வரை உள்ளோர் பயிற்சி பெறக்கூடிய மனநிலை குன்றிய குழந்தைகளாவர்.
- நுண்ணறிவு ஈவு 25க்குள் குறைவானவர்கள் முற்றிலும் மற்றவர்களை சார்ந்தவர்களாவர்.
2.புலன்வழி அணுகுமுறை
புலன்வழி அணுகுமுறையானது புலன்கள் அடிப்படையானது. இவ்வணுகுமுறையினை கொண்டு கண்பார்வை குன்றியவர்கள், காது கேட்கும் திறன் குன்றியவர், வாய்பேச இயலாதோரை அடையாளம் காணலாம். இதில் கண்பார்வை குன்றியவர்கள் அறிவுசார் குறைபாடுகளிலோ (அ) தகவல் பரிமாற்றம் குறைபாடுகளிலோ சேராதோர், மற்றோர் வகையில் தகவல் பரிமாற்றம் காது கேளாத குழந்தைகளின் முக்கிய பிரச்சினையாக கருதப்படுகின்றது. கண்பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் அறிவுசார் செயல்பாடுகள் குன்றியவர்கள் ஒரே வகையான கலைத்திட்டத்தை பின்பற்றலாம்.
3.திறன் அடிப்படையிலான அணுகுமுறை
தகவல்களை செயல்முறை படுத்துவதில் பல குழந்தைகள் சிரமங்களை சந்திக்கின்றன. அவர்களின் நுண்ணறிவு மற்றும் புலன்கள் சாதாரண நிலை கொண்ட போதிலும் அவர்களால் சில சமயம் சரிவர தகவல்களை செயல்முறைப் படுத்த இயலாத நிலை ஏற்படுகிறது. இவ்வகையான குழந்தைகள் கவனம், புலன்காட்சி நினைவாற்றல் போன்றவற்றில் பின்தங்கிய நிலை காணப்படுவர். இக்குழந்தைகள் கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் என்று அழைக்கப்படுவர்.
4.சமூக அடிப்ப்படையிலான அணுகுமுறை
குறைபாடுடைய மாணவர்களிடையே, சில குழந்தைகள் உணர்வு பூர்வமான பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இக்குழந்தைகள் பிறரை புறக்கணிப்பது, மிகப் பாதுகாப்பு போன்ற நடத்தை குறைபாடுகள் கொண்டவராக இருக்கின்றனர். இக்குறைபாடுகளை தகர்த்;தறிய குழந்தைகளுக்கு தகுந்த சமூக சூழலை ஏற்படுத்த வேண்டும்.
குறைபாடுடைய மாணவர்களை கையாள்வதில் ஆசிரியரின் பங்கு
- கற்றல் செயல்பாடுகளை சிறு படிநிலைகளாக பிரித்தல்.
- தொடர்ச்சியாக வினாக்களை எழுப்பி புரிதலை சோதித்தல்.
- தொடர் பின்னூட்டம் அளித்தல்.
- தகவல்களை காட்சிபூர்வமாகவும், வார்த்தை மூலமாகவும் அளித்தல்.
- படங்கள், வரைபடம் போன்றவற்றை கற்பித்தலுக்கு பயன்படுத்துதல்.
- ஒவ்வொருவருக்கும் தனித்தனி பயிற்சியளித்தல்.
- சில உத்திகளை எங்கு, எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுதல்.
- தேவையான உபகரணங்களை அவ்வப்போது பயன்படுத்துதல்.
- பாடம் தொடங்குமுன் அதைப்பற்றிய முழுவிவரங்களை அளித்தல்.
- எழுத்து மற்றும் வாய்மொழி ஒப்படைப்புகளை அளித்தல்.
முடிவுரை
கற்றல் குறைபாடு என்பது ஓர் நரம்பியல் கோளாறாகும். கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் தம் சக தோழர்களை விட சிறந்து விளங்குகின்றனர். ஆனால் அவர்களுக்கு படித்தல், எழுதுதல், காரணகாரியமறிதல், நினைவுகூர்தல் மற்றும் தகவல்களை ஒருங்கமைத்தலில் சிரமம் ஏற்படுகிறது. கற்றல் குறைபாடு என்பது குணப்படுத்த இயலாத ஓர் வாழ்நாள் பிரச்சனை. தகுந்த ஆதரவும், உத்திகளையும் பயன்படுத்தி குழந்தைகள் தங்கள் குறைபாட்டிலிருந்து வெளியே வந்து தங்கள் பள்ளி வாழ்க்கையை அனுபவித்து வெற்றிகரமாக வாழலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கற்றல் குறைபாட்டை அடையாளம் கண்டு, அவர்களை உற்சாகப்படுத்தி, அவர்தம் குழந்தைக்கான கல்வி முறையை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
சிந்திக்கவும் கலந்துரையாடவும் சில வினாக்க்கள்
- கற்றல் இயலாமையின் பல்வேறு வகைகளை விளக்குக.
- கற்றல் இயலாமையுடைய மாணாக்கரை அடையாளம் காண்பதின் முக்கியத்துவத்தை விவரிக்க.
- மாணவர்களின் கற்றல் இயலாமையை போக்க மேற்கொள்ள வேண்டிய உத்திகளை பரிந்துரைக்க.
- இயலாமையுடைய குழந்தைகளை அடையாளம் காணும் பல்வேறு அணுகுமுறைகளை விளக்குக.
- இயலாமையுடைய மாணாக்கரை கையாள்வதில் ஆசிரியரின் பங்கினை விவாதிக்க.
Read more:
- கலைத்திட்ட உருவாக்கமும் சமூக செல்வாக்கும்
- பின்னோக்கல் கற்றல் (Retrospective learning)
- இயலாமையை அறிதல் (Recognizing Disability)
- 21st Century Teacher and Learning Resources (21 ஆம் நூற்றாண்டு ஆசிரியரும் கற்றல் வளங்களும்)
- செயல்நிலை ஆய்வு – கல்விமாணி கற்கைநெறி (Research for B.ed & M.ed)
- எண்மான தொழினுட்ப கல்வியின் சவால்களும் அவற்றை வெற்றிகொள்ளலும் (சுற்றாடல்சார் பாடத்தினை மையமாகக் கொண்ட ஆய்வு)
- அனைவருக்கும் கல்வி : இலங்கையில் கல்வி வாய்ப்புகளை வழங்குவதில் உள்ள சவால்களை இழிவளவாக்குதல்.
- கல்வியில் சமத்துவமின்மையை பகுப்பாய்வு செய்தல்
- உள்ளடக்கல் கல்விக்கான தேசிய மற்றும் சர்வதேச அளவில் முன்வைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் கட்டளைகள்
- இலங்கையில் முறைசார் கல்வி சமூக நிலைத்திருப்புக்கு பங்களிப்புச் செய்யும் விதங்கள்
எமது WhatsApp குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.
ஆரம்பப்பிரிவு ( தரம் 01 – 05 ) குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.
https://chat.whatsapp.com/GUJDMcOOP1REj266FNVA6X
எமது WhatsApp Channel இல் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.
இடைநிலைப்பிரிவு ( தரம் 06 – A/L) குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.
https://chat.whatsapp.com/CRxK1Zqu0XJ52hJYNGC6ab
எமது Facebook தளத்தை பார்வையிட கிழே உள்ள link இனை அழுத்தவும்.
https://www.facebook.com/profile.php?id=100090300862977&mibextid=ZbWKwL